இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது இந்திய அணி. இதன்மூலம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் தகுதிப்பெற்றுள்ளது. இதை சாத்தியப்படுத்திக் கொடுத்ததில் அக்ஷர் மற்றும் அஷ்வினின் பங்கு அதிகமாக இருக்கிறது. இருவரும் இணைந்து இந்தத் தொடரில் 62 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, இன்று அவர்கள் இருவரும் வீசிய ஸ்பெல்தான் ஆட்டத்தை மூன்றே நாட்களுக்குள் முடிப்பதற்குக் காரணமாக இருந்தது.
முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்தில் இந்திய அணி தடுமாறினாலும் ரிசப் பன்ட், வாஷிங்டன் சுந்தர் கூட்டணியின் அபார ஆட்டத்தால் முன்னிலை பெற்றது. அட்டகாசமாக ஆடி சதம் அடித்தார் பன்ட். நேற்று பன்ட் விட்டுச் சென்ற வேலையை இன்று வாஷிங்டன் சுந்தர் தொடர்ந்தார். இன்று காலை பெஸ், லீச் பந்துவீச்சை பொளந்துகட்டியது வாஷி – அக்ஷர் கூட்டணி. கடைசி கட்டத்தில் அக்ஷர், இஷாந்த், சிராஜ் அனைவரும் 5 பந்து இடைவெளியில் வெளியேற, இந்தியா 365 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நான் ஸ்டிரைக்கர் எண்டில் 96 ரன்களுடன் நின்றுகொண்டிருந்தார் வாஷி!

ஓரளவு சவால் கொடுப்பார்கள் என்று நினைக்க, வழக்கம்போல் சொதப்பினார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். அஷ்வின், அக்ஷர் சுழல் கூட்டணியிடம் முழுமையாக சரணடைந்த அந்த அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. அக்ஷர், அஷ்வின் இருவரும் தலா 5 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் வீசப்பட்ட 54.5 ஓவர்களில் 46.5 ஓவர்களை அக்ஷஷரும் அஷ்வினும் மட்டுமே வீசியிருந்தனர். இந்த பிட்ச் கடந்த போட்டியளவுக்கு ஸ்பின்னுக்கு உதவவில்லையெனினும் இரு அணி வீரர்களும் பேட்டிங்கில் தடுமாறியதற்கு அவர்களின் மனத்தடையும் அதீத ஜாக்கிரதையான அணுகுமுறையும் ஒரு காரணம் என நேற்றைய ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருந்தோம். பன்ட்டும் வாஷியும் மட்டுமே பிட்ச்சை பற்றியெல்லாம் அதிகம் யோசிக்காமல் தங்களுடைய நேச்சுரல் கேமை ஆடினர்.
ஏற்கனவே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பிட்ச்சில் பூதம் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று கோலி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைச் சுற்றிக் கட்டம் கட்டி பயங்கர அக்ரஸிவாக ஃபீல்ட் செட்டப் வைத்து மேலும் பதற்றமடைய வைத்தார்.
இந்த ஃபீல்ட் செட்டப்புக்கு ஏற்ற வகையில் கச்சிதமாக அஷ்வினும் அக்ஷரும் வீசியதுதான் ஹைலைட். டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு ரூம் கொடுக்காமல் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனில் ரன்கள் கொடுக்காமல் கட்டுக்கோப்பாக வீசுவதை போல இருவரும் வீசிக்கொண்டிருந்தனர். அஷ்வின், அக்ஷர் இருவரின் பெயரைக் கேட்டாலே பதறும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் ஃபுல் லெந்தில் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்தை என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினால் கூட எதாவது ஷாட்டுக்கு முயற்சிக்கலாம். ஆனால், இருவருமே அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஸ்டம்ப் டூ ஸ்டம்பாகத்தான் போடுவோம் கட்டாயமாக பேட்டை விட்டு டிஃபன்ஸ் ஆடித்தான் ஆக வேண்டும் என்கிற நிலையை உண்டாக்கினர். கட்டம் கட்டி ஃபீல்டர்கள் நிற்பதால் சிங்கிள்கள் கூட தட்டமுடியாத நிலையும் ஏற்பட்டது. ரன்னும் வராமல் ஓவரையும் கடத்த முடியாமல் பேட்ஸ்மேன்கள் விழிபிதுங்கினர். அ
அக்ரஸிவ் ஃபீல்ட் செட்டப் அக்ரஸிவ் லைன் & லென்த் இரண்டுமே ஒரு நேர்க்கோட்டில் இணைக்கப்பட்டதை இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் எதிர்கொள்ளவே முடியவில்லை. போப், லாரன்ஸ் இருவரும் மட்டும் கொஞ்சம் தைரியமாக இறங்கி வந்து சில ஷாட்களை முயற்சித்தனர். இதை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் செய்திருந்தால் அஷ்வின்-அக்ஷர் இருவரின் லைன் & லென்த்தை மாற்ற வைத்திருக்க முடியும். ஃபீல்டையும் கோலி கொஞ்சம் டிஃபன்ஸிவ் ஆக்கியிருப்பார். அதன்மூலம் ரன்களையும் கொஞ்சம் எளிதில் சேர்த்திருக்க முடியும். இங்கிலாந்து இந்த விஷயத்தை யோசிக்கும் முன்பே அஷ்வினும் அக்ஷரும் சோலியை முடித்துவிட்டனர்.
இந்தத் தொடரை வென்றதில் முக்கால்வாசி பாராட்டு அஷ்வின் மற்றும் அக்ஷர் இருவருக்குமே கொடுக்கப்பட வேண்டும். இருவரும் சேர்ந்து இந்த தொடரில் 62 விக்கெட்டுகளை எடுத்திருக்கின்றனர். இருவரின் சுழலும்தான் இந்தியாவை லார்ட்ஸில் காலடி எடுத்து வைக்க செய்திருக்கிறது என்பதில் துளியளவும் மிகையில்லை.
Leave a Reply