இலங்கை – ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் வரை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் சக்தியாக விளங்கியது. 1996 உலகக் கோப்பை வென்றபிறகு அவர்களின் கிராஃப் தொடர்ந்து ஏறிக்கொண்டேதான் இருந்தது. 2003 உலகக் கோப்பையில் அரையிறுதி, 2007-ல் ரன்னர் அப், 2011-ல் மீண்டும் ரன்னர் அப், 2014 டி-20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் என அசத்திக்கொண்டிருந்த அந்த அணி, இப்போது அதள பாதளத்தை அடைந்திருக்கிறது.
ஜெயவர்தனே, சங்கக்காரா, தில்ஷன், முரளிதரன் என அந்த அணியின் நட்சத்திரங்கள் அடுத்தடுத்து ஓய்வுபெற, இன்று அந்த அணியைத் தாங்கிச் செல்லும் ஒரு சக்தி இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. முன்னணி வீரர்களாக வருவார்கள் என்று கருதப்பட்ட மாத்யூஸ், சந்திமல் போன்றவர்கள் உலக அரங்கில் பெரிய தாக்கம் ஏற்படுத்தத் தவறிவிட்டார்கள். அதேபோல், அடுத்த தலைமுறையையும் வளர்த்தெடுக்காமல் விட்டுவிட்டது இலங்கை. விளைவு, வெஸ்ட் இண்டீஸ் போல் வாழ்ந்துகெட்ட ஜமீனாக மாறிவிட்டது. மலிங்கா ஓய்வு பெற்றுவிட, வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு இலங்கை வீரர் கூட இருக்கப்போவதில்லை! இலங்கை கிரிக்கெட்டுக்கு இப்படியொரு நிலை ஏன்?!
இன்று உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் கிரிக்கெட் அணிகள் ஒவ்வொன்றுக்கும் பின்னால், 90களில் அந்த அணியின் ஸ்டார்களாக இருந்தவர்கள் இருக்கிறார்கள். கங்குலி பி.சி.சி.ஐ தலைவராக இருக்கிறார். டிராவிட் அடுத்த தலைமுறையைப் பார்த்துக்கொள்கிறார். பான்டிங், லேங்கர் போன்றவர்கள் ஆஸ்திரேலிய அணியின் எழுச்சிக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்தின் டைரக்டர் ஆஃப் கிரிக்கெட்டாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் ஆஷ்லி ஜைல்ஸ். தென்னாப்பிரிக்காவை மீட்டெடுக்க கிரீம் ஸ்மித், மார்க் பௌச்சர் போன்றவர்கள் கைகோர்த்திருக்கிறார்கள். ஆனால், இலங்கை கிரிக்கெட்டில் மட்டும் இப்படியொரு விஷயம் நடப்பது அரிதானதாகவே இருக்கிறது.
ஜெயவர்த்தனே, சங்கக்காரா, ரணதுங்கா போன்ற உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் வளங்கள் இன்னும் ஏன் இலங்கை கிரிக்கெட்டிற்குள் நுழையாமல்தான் இருக்கிறார்கள். ஜெயவர்த்தனே மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். சங்கக்காரா ராஜஸ்தான் ராயல்ஸின் டைரக்டர் ஆஃப் கிரிக்கெட் பொறுப்பை ஏற்றிருக்கிறார். ஆனால், இலங்கை கிரிக்கெட்டில் பணியாற்ற அவர்கள் விரும்பவில்லை. அரசியல் மட்டுமே ஆட்சி செய்கின்ற கிரிக்கெட் சமுதாயத்துடன் இணைந்து செயற்பட விரும்பாமலே அவர்கள் ஒதுங்கி நிற்கிறார்கள். அதனால் இலங்கை கிரிக்கெட் மீண்டு வரவே முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது
சவுத் ஆப்ரிகா, இங்கிலாந்து என தொடர்ச்சியாக இரண்டு பெரிய டெஸ்ட் தோல்விகளைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் மீதும் கிரிக்கெட் சபை மீதும் பெரிய குற்றச்சாட்டுக்கள் வந்து சேர்ந்தது. சனத் ஜெயசூர்யா, அர்ஜுனா ரணதுங்கா, குமார் சங்கக்கார போன்ற முன்னாள் ஆட்டக்காரர்கள் இலங்கை அணியின் தற்போதய கிரிக்கெட் இவ்வளவு மோசமாக பயணிக்க என்ன காரணம் என்பதையும் அங்குள்ள முறையற்ற அமைப்புகள் பற்றியும் மீடியாக்களில் புலம்பியிருந்தார்கள்.
இவ்வாறு தொடர்ந்து இடம்பெறுகின்ற வினைத்திறனற்ற செயற்பாட்டால் முழுமையாக கிரிக்கெட் அழியப்போகின்றது என்பதனை நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தலைவர் உணர்ந்திருக்கிறார். அதாவது தற்போதய விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷே முன்னாள் வீரர்கள் பலரை கிரிக்கெட் போர்ட்டுக்கு அழைத்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த சில திடீர் முயற்சிகளை எடுத்துவருகிறார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய தொழிநுட்ப ஆலோசனைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அரவிந்த டி சில்வா, “நாங்கள் அனைத்து கிரிக்கெட் விஷயங்களைப் பற்றியும் கண்கானிக்கத்தான் இங்கே இருக்கிறோம். நிச்சயமாக முதல்தர போட்டியமைப்பை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் அதைப்போல இந்த விளையாட்டை அடி மட்டத்திலிருந்து பார்ப்பது முக்கியமானது. நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை எடுப்போம்” என்று கூறினர். சமீப காலங்களில் கிரிக்கெட் விஷயங்களைக் கண்கானிக்க ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் நியமிக்கப்படுவது இலங்கை கிரிக்கெட்டில் இதுதான் முதல் முறை.
நிர்வாகத்தில் இதுபோன்ற சரியான ஆள்கள் இல்லாதது ஒவ்வொரு விதத்திலும் அவர்களின் கிரிக்கெட்டைப் பாழாக்கியது. அடிப்படை மட்டத்திலிருந்தே விரிசல்களை உண்டாக்கியது. தரமான வீரர்கள் வருவதென்பதே மிகவும் அரிதாகிப்போனது.
இந்திய அணியை எடுத்துக்கொள்வோம். அவர்களது குவாலிட்டியான கிரிக்கெட் எப்பொழுதுமே தொடரும் என்பது அனைவருக்கும் தெரிந்தது, ஒரு போட்டியில் 36 ரன்களுக்குள் சுருண்டு விட்டால், அதையே மறக்கும் அளவுக்கு அடுத்த போட்டியில் பெரிய சம்பவங்களை நிகழ்த்தித்தான் ஓய்கிறார்கள். இன்று நேற்று கிடையாது, இது காலம் காலமாக தொடர்கின்ற அவர்களின் அட்டகாசமான பாலிசி.

அன்று சொந்த நாட்டுக்குள் சம்பவம் செய்தார்கள், இன்று ஆஸ்திரேலியா போன்ற அந்நியய மண்ணிலே அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் ஒரு இளம் படை அதை நிகழ்த்திவிட்டு அசால்ட்டா நகர்கின்றது. இந்த பெரிய வெற்றிக்கெல்லாம் பின்னால் மிகப்பெரிய பக்க பலம் இருக்கிறது , சுப்மன் கில், ரிசப் ஃபன்ட் போன்ற இளம் நட்சத்திரங்கள் எதிர்காலத்தில் இந்திய அணியை நகர்த்திச் செல்லத் தயாராக இருக்கிறார்கள். விராட், ரோஹித் போன்ற அசுரர்கள் இருக்கும் காலத்திலே இப்பிடியான வீரர்களும் கிடைத்தது அணியை மேலும் மேலும் அழகாக நகர்த்த உதவுகிறது.
உள்ளூர் போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்தி மிகப்பெரிய ஆட்படையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ரஞ்சி ட்ராஃபி போன்ற பெறுமதியான தொடர்கள் நடத்தப்படுகிறது. TNPL போன்ற தொடர்களில் சாதிப்பவர்களை கண்டெடுத்துத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். ஐ.பி.எல் நாயகர்களை வைத்து டி-20 டீமை பலப்படுத்துகிறார்கள். இவற்றையெல்லாம் விட 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட்டிற்கென பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. டிராவிட் என்ற அற்புதமான கிரிக்கெட் டீச்சரை வைத்து இளம் படையை நேர்த்தியாக உருவாக்குகிறார்கள். ஆனால், இலங்கையின் நிலை அப்படியில்லை.
அஸ்திவாரங்களை பிழையாக அமைத்த கட்டடங்கள் எப்பொழுதும் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நின்றதாக சரித்திரமே கிடையாது, ஆனால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் என்ற கட்டடம் அஸ்திவாரமே இல்லாமல் கட்டப்படுகின்றது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஸ்ரீலங்கா கிரிக்கெட் என்ற பெயர் சர்வதேசத்தில் நிலைத்திருக்க போகின்றதோ தெரியாது. ஏனெனில், பெயர் குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவிற்கு அங்கு முதல் தர கிரிக்கெட் கிடையாது.
அதேபோல், இடையிடையே நடக்கின்ற சில உள்ளுர் போட்டிகளில் சாதிக்கின்ற இளம் வீரர்களின் பெயர்களும் வெளிவருவது கிடையாது, ஆர்மி டோர்னமென்ட் போன்ற பெரிய தொடர்கள் நடந்தும் இளம் வீரர்கள் பற்றி வெளியே தெரிவது இல்லை. டிவிஷன் 2, டிவிஷன் 3 போட்டிகளில் சிறந்த பேட்டிங், பௌலிங்கில் சிறப்பாக செயல்படுகின்ற வீரர்களைப் பற்றி பத்திரிகைகளில் மட்டும் கதைத்து விட்டு மறந்து விடுவார்கள். எல்.பி.எல் போட்டிகளில் சாதித்த லக்ஷன் தனஞ்செயா, வியாஸ்காந் போன்ற வீரர்கள் பற்றி கூட இன்னும் கவனத்திற் கொள்ள மறுக்கிறார்கள்.
இலங்கையை பொறுத்தவரை Division 03, Division 02 போட்டிகள் சிறந்த தொடர் என்று சொல்லலாம். அங்கு மிகப்பெரிய பொக்கிஷங்களை இனங்கண்டு கொள்ள முடியும். அந்த தொடரை உலகம் காணக்கூடிய அளவுக்கு வெளிக்கொண்டு வந்து நடத்த வேண்டும். இவ்வளவு நாள் தான் இடம்பெறவில்லை ஆனால் தற்போது முதற்தர போட்டிகளுக்கு பிரதான கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முத்தையா முரளிதரன் அதனை நிவர்த்தி செய்வாரா என பொறுத்திருந்து தான் பாக்க வேண்டும்.
அயல் நாட்டு கிரிக்கெட் அமைப்புக்களை பார்த்தேனும் தங்களது அடிப்படைப் பிழைகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் ஒரு சவால் கொடுக்கும் இலங்கை அணியை உலகத்திற்கு இவர்களுக்குக் கொடுப்பார்களா என்பதுதான் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம். அரவிந்த் டி சில்வா அதை நிறைவேற்றுவாரா!
Leave a Reply