எந்த ஒரு மனிதருக்கும் மனபலம் என்பது ரொம்ப முக்கியமானது. குறிப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய மனோதிடமும் துணிச்சலும் அதிகம் இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் அஷ்வினை மிகச்சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். சமகால கிரிக்கெட்டர்கள் யாருடன் ஒப்பிட்டாலும் அஷ்வினின் மனோதிடமும் துணிச்சலும் அவர்களைவிட ஒருபடி அதிகமாகவே இருக்கும்.
கரியரின் ஆரம்பக்கட்டத்தில், சூறாவளியாய் மிரட்டும் கெய்லுக்கு எதிராக ஐ.பி.எல் போட்டிகளில் இளம் வீரராக முதல் ஓவரை தைரியமாக வீசியதிலிருந்து அவரின் மனோதிடத்துக்கான உதாரணங்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். 2013 சாம்பியன்ஸ் ட்ராஃபியில் கடைசி ஓவரை வீச வந்தது இன்னொரு உதாரணம். அவரது யூடியூப் சேனலில் குவாரன்டைனின் போது ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் ‘நீங்கள் எந்த வீரருக்கு பந்துவீசும் போது பயப்படுவீர்கள்?’ என கேள்விக் கேட்டிருப்பார். அதற்கு அஷ்வின் ‘நான் எந்த வீரருக்கும் பயப்பட்டதில்லை. தில்லுக்கு துட்டாக இறங்கி வீசி விடுவேன்’ என கூறியிருப்பார். இதுதான் அஷ்வின். அவரை எந்த வீரரும் எந்த சூழ்நிலையும் பயமுறுத்தாது. எதுவாக இருந்தாலும் சமாளித்துவிடுவோம் என்கிற பெரும் நம்பிக்கை எப்போதும் அவரிடம் இருக்கும்.
2010 ஐ.பி.எல் தொடரின்போது சி.எஸ்.கே தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருந்தது. அரையிறுதிக்கே தகுதிப்பெறாது என்கிற சூழல்தான் இருந்தது. அச்சமயத்தில் பத்ரிநாத்திடம் ‘எனக்கென்னவோ இந்த தடவை நாம ஃபைனல்ஸ்க்கு போயி கப் அடிப்போம்னு தோனுது’ என அஷ்வின் கூறியிருக்கிறார். அந்த சமயத்தில் அது மிகப்பெரிய காமெடியாக பார்க்கப்பட்டிருக்கும். ஆனால், அஷ்வின் சொன்னது போலவே அந்த ஆண்டு கோப்பையை வென்றது சூப்பர் கிங்ஸ்.
அந்த சீசன் சென்னைக்காக முரளிதரனுக்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை எடுத்து அஷ்வினும் அசத்தியிருந்தார். சிட்னி டெஸ்ட்டில் எழுந்து நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்த போதும் முழுமையாக பேட்டிங் ஆடி ‘பெரிய ஸ்கோரை அடித்துவிட்டுதான் வருவேன்’ என ட்ரெஸ்ஸிங் ரூமில் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். இது எல்லாமே அவருடைய யூடியூப் சேனலில் பகிரப்பட்ட விஷயங்கள்.
எப்பேற்பட்ட சிக்கலான சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழந்துவிடக்கூடாது, வெற்றிக்கான போராட்டத்தில் எந்த நொடியிலும் எதிராளியின் விஸ்வரூபத்தை பார்த்து பதற்றமடைந்துவிடக்கூடாது. முழுமையாக நம்முடைய திறனில் மட்டுமே நம்பிக்கை வைத்தால் போதும் என்பதற்கு இந்த சம்பவங்கள் சிறந்த உதாரணங்கள். இப்போது சேப்பாக்கத்தில் 8 விக்கெட்டுகளை எடுத்து, சதமும் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றிருக்கிறார். இதற்கு அஷ்வினின் அந்த பெரும் நம்பிக்கை மட்டுமே காரணமாக அமைந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே அஷ்வினுக்கு தேசிய கிரிக்கெட்டில் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. வெளிநாட்டு போட்டிகளில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். ஜுனியரான குல்தீபுக்குக்கூட சில வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஒயிட் பால் கிரிக்கெட்டில் மொத்தமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டார். ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியில் கேப்டனாக இருந்தார். ஒருகட்டத்தில் கேப்டனையே பஞ்சாப் அணி வெளியேற்றியது. இப்படி கடந்த சில ஆண்டுகளாக அஷ்வினின் கிரிக்கெட் கரியரில் தேக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், அத்தனையும் தாண்டி முழு நம்பிக்கையோடு கிரிக்கெட்டை தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்.
துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் டெல்லி அணிக்காக சிறப்பாக பந்துவீசி அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முக்கியக் காரணமாக அமைந்தார். ஒயிட் பால் கிரிக்கெட்டில் அஷ்வின் இனிமேல் அவ்வளவுதான் என்று சொன்னவர்களுக்கு இது பதிலடியாக அமைந்தது. அடுத்து நடந்த ஆஸி தொடரில், தன்னுடைய திறமை மற்றும் மனோதிடத்தின் உச்சத்தை வெளிக்காட்டினார். ஸ்மித் உள்பட ஆஸ்திரேலியாவின் முக்கிய பேட்ஸ்மேன்களைக் கட்டம் கட்டி வெளியேற்றினார். சிட்னியில் விஹாரியுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை ஆடினார்.
‘அணியில் ஒரு ஸ்பின்னருக்குதான் இடம் எனில் முதல் ஆப்சனாக நான்தான் இருக்க வேண்டும்’ என ஒரு பெரிய ஸ்டேட்மென்ட்டை ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு செய்தியாக்கியிருக்கிறார். அப்படியே இங்கே சேப்பாக்கத்துக்கு வந்து முதல் போட்டியில் ஒரு 5 wicket haul, இரண்டாவது போட்டியில் மொத்தமாக 8 விக்கெட் + சதம் என மிரட்டியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்து இனிமேல் ஓய்வு பெறும் வரை அவரின் இடத்தில் கை வைக்க முடியாது என்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.
இது எல்லாவற்றிற்கும் அடிப்படையிலேயே அவருக்குள் ஊறியிருக்கும் துணிச்சலும், பெரும் நம்பிக்கையும் மட்டுமே காரணம். இன்றைய இளைஞர்கள் அவரிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய பாடமும் இதுவே!
Leave a Reply