இந்தியாவின் லிஸ்ட் ஏ தொடரான விஜய் ஹசாரே டிராபியின் நாக் அவுட் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கேரளாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் கர்நாடக அணியின் தேவ்தத் படிக்கல் சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த தொடரில் படிக்கல் தொடர்ச்சியாக அடித்த நான்காவது சதம் இது என்பதுதான் குறிப்பிட வேண்டிய விஷயம்.
2020 சையது முஷ்தாக் அலி தொடரில் தொடங்கியது படிக்கலின் விஸ்வரூபம் இன்னும் வீரியம் குறையாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தன் முதல் ஐ.பி.எல் தொடரிலேயே அனைவரின் கவனத்தையும் பெற்றவர், இப்போது 50 ஓவர் ஃபார்மட்டிலும் தன் திறமையை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த சீசன் முழுவதுமே படிக்கல் வெறித்தனமான ஃபார்மில் இருக்கிறார். உத்திரப்பிரதேசத்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே அரைசதத்தோடு நன்றாக ஆரம்பித்திருந்தார். அடுத்தடுத்த போட்டிகளில் இன்னும் சிறப்பாக ஆடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். பீகாருக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 97 ரன்கள் அடித்திருந்தார். இந்தப் போட்டியில் சதம் மிஸ் ஆகியிருந்தாலும் இதற்கு பிறகு நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலுமே சதங்களாக அடித்துத் தள்ளினார்.
ஒடிசாவுக்கு எதிரான போட்டியில் 140 பந்துகளை எதிர்கொண்டு 152 ரன்களை எடுத்து பெரிய இன்னிங்ஸ் ஆடியிருந்தார். 14 ஃபோர், 5 சிக்ஸர் என பௌண்டரிகள் மூலமாக மட்டும் 82 ரன்கள் எடுத்தார். அடுத்து கேரளாவுக்கு எதிராக 126 ரன்களை எடுத்தார். ரயில்வேக்கு எதிராக 145 ரன்கள் என உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார் படிக்கல்.
படிக்கலுடன் சக ஓப்பனரான சமர்த்தும் இந்த சீசனில் அட்டாகசப்படுத்தி வருகிறார். இருவரும் சேர்ந்து கர்நாடக அணியை எளிதாக வெற்றியை நோக்கி அழைத்து செல்கின்றனர். ரயில்வேக்கு எதிராக 285 ரன்கள் டார்கெட்டை விக்கெட்டே விடாமல் சேஸ் செய்து மிரட்டியிருந்தனர்.
இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 673 ரன்களோடு படிக்கல் முதலிடத்திலும் 605 ரன்களோடு சமர்த் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்.
இன்று நடைபெற்ற கேரளாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலும் சமர்த் 192 ரன்களையும் படிக்கல் 101 ரன்களையும் எடுத்திருக்கின்றனர். படிக்கல் தொடர்ச்சியாக அடித்த நான்காவது சதம் இது. இதற்கு முன்னர் லிஸ்ட் ஏ போட்டிகளில், இப்படி தொடர்ச்சியாக நான்கு சதங்களை இலங்கையின் சங்ககராவும் சவுத் ஆப்பிரிக்காவின் பீட்டர்சன் மட்டுமே அடித்துள்ளனர்.
கொரோனாவுக்கு முன்பாக நடைபெற்ற விஜய் ஹசாரே சீசனிலும் படிக்கல்தான் அதிக ரன்களை எடுத்திருந்தார். அந்த பெர்ஃபார்மென்ஸ்கள்தான் அவர் ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட முக்கியக் காரணமாக இருந்தது. இப்போது இந்த சீசனிலும் ரன்மழை பொழிந்து வருகிறார். பெங்களூர் அணிக்கான அழைப்பு வந்ததை போல இந்த முறை இந்திய அணிக்கான அழைப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
தவானுக்கு வேறு வயதாகிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவுக்கான அடுத்த இடது கை ஓப்பனர் ஸ்லாட்டுக்கு படிக்கல் சிறப்பாகப் பொறுந்திப்போவார். ஒருவேளை இந்த ஐ.பி.எல் தொடரிலும் ரன் மழை பொழிந்துகொண்டே இருந்தால், தவானுக்குப் பதிலாகவும் படிக்கல் இந்திய அணிக்குள் இடம்பிடிக்கலாம். இத்தனைக்கும் இவருக்கு இப்போதுதான் 20 வயது ஆகிறது. இந்திய அணிக்குள் சீக்கிரமே படிக்கல் நுழைந்தால், ஒரு தசாப்தத்துக்கும் மேலாக அணியின் முக்கிய அங்கமாக விளங்குவார்.
Leave a Reply