மார்ச் 3, 2009. இந்தத் தேதியை கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியாது. பாகிஸ்தானில், இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தினம் இன்று. ஆண்டாண்டாக நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு மகிழ்ச்சிக்கரமான சம்பவமாக இல்லாவிட்டாலும் அன்றைய தினம் ஏற்படுத்திய அதிர்ச்சியின் விளைவாக இன்றும் எல்லோர் மனதிலும் அந்தச் செய்தி ஒட்டிக்கொண்டேதான் இருக்கிறது.
மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகே பாகிஸ்தானுக்குக் கிரிக்கெட் ஆட செல்வதை பெரும்பாலான நாடுகள் தவிர்க்கத் தொடங்கின. இலங்கை அணி மட்டுமே பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் அழைப்பை ஏற்று பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட சென்றது.
இந்தத் தொடர் திட்டமிடப்படும்போதே அப்போது இலங்கை கிரிக்கெட் போர்டில் முக்கியப் பொறுப்பிலிருந்த அர்ஜீனா ரணதுங்காவிடம் சங்ககரா உட்பட சீனியர் வீரர்கள் பாகிஸ்தான் செல்வது குறித்து ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். குறைந்தபட்சமாக, வீரர்களுக்கு இன்சூரன்ஸ் ஆவது ஏற்பாடு செய்யுமாறு கேட்டிருக்கிறார்கள். ஆனால், இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களின் கோரிக்கையை பெரிதாகக் கவனத்தில் கொள்ளவில்லை. இலங்கை வீரர்களுமே கூட இதை ஒரு கோரிக்கையாகத்தான் வைத்தார்களே தவிர, தீவிரமாக இது குறித்து எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. பின்னால் இப்படி ஒரு பயங்கரவாதம் நடக்கப்போகிறது என யாரும் யோசித்திருக்ககூட மாட்டார்கள்.
நடக்கப்போகும் பயங்கரவாதத்தின் தீவிரம் தெரியாமல் இலங்கை அணியும் பாகிஸ்தானுக்கு பயணப்பட்டது. முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் அமைதியாக நடந்து முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி, கோரத்தாக்குதலுக்கான எந்தவித அறிகுறியுமின்றி லாகூரில் தொடங்கியது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஃப்ளாட்டான விக்கெட். இலங்கை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியதால் இரண்டாவது நாளின் கடைசி செஷனில்தான் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 23 ஓவர்களில் 110 ரன்களை எடுத்து வலுவாக ஆடிக்கொண்டிருந்தது.

இந்நிலையில்தான் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர இலங்கை கிரிக்கெட் அணி ஹோட்டலிலிருந்து பேருந்தில் மைதானத்துக்கு கிளம்பியது. அன்றைய நாளில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வீரர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்தனர். மைதானத்தை பேருந்து நெருங்கிவிட்ட நிலையில் திடீரென வெடி வெடிக்கும் சத்தம் கேட்டது. ரசிகர்கள் வெடி வெடிப்பதாக வீரர்கள் நினைத்துக்கொள்ள, அடுத்த நொடியே பேருந்தின் டிரைவரும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த தில்ஷனும் பதற்றத்தோடு அனைவரும் ‘கீழே குனியுங்கள்…கீழே குனியுங்கள்’ எனக் கூச்சலிடத் தொடங்கும்போதுதான் நடந்துக்கொண்டிருக்கும் விபரீதம் அனைவருக்கும் புரியத்தொடங்கியது.
வெளியே கேட்டது வெடி சத்தம் அல்ல. தீவிரவாதிகள் சிலர் இலங்கை வீரர்களின் பேருந்தை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தனர். இதனால் இலங்கை வீரர்கள் துரிதமாக கீழே குனிந்தும் படுத்துக்கொண்டும் தற்காப்பில் இறங்கினர். அப்படியிருந்தும் திலன் சமரவீரா, அஜந்தா மெண்டீஸ், பரனவிதானா, லக்மல் உட்பட பேருந்தில் இருந்த 7 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. சமரவீராவின் தொடையில் புல்லட் பாய்ந்து ரத்தம் கொட்டியது. அதிர்ஷ்டவசமாக ட்ரைவரின் மீது புல்லட் எதுவும் பாயாததால் ட்ரைவர் சாதுரியமாக பேருந்தை கிரவுண்டுக்குள் விட்டுவிட்டார். இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமாயிருக்கும். இந்தத் தாக்குதலில் 6 பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் 2 பொது மக்கள் உயிரிழந்தனர். விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தீவிரவாத தாக்குதல் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

பாகிஸ்தானுக்கு எந்த அணியும் கிரிக்கெட் ஆடச் செல்வதற்கு தயாராக இல்லை. 2011 உலகக்கோப்பை பாகிஸ்தானிலும் சேர்த்தே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் அப்போது இழந்த நம்பிக்கையை இன்னமும் அவர்களால் முழுமையாக மீட்க முடியவில்லை.
ஐக்கிய அரபு அமீரகத்தை அவர்களின் சொந்த மைதானமாகக் கொண்டு 10 ஆண்டுகள் ஆடிவிட்ட பிறகு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தானிலும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறத் தொடங்கியிருக்கிறது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே போன்ற கடினமான சூழலில் இருக்கும் கிரிக்கெட் போர்டுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட சென்றுகொண்டிருக்கின்றன. பல்வேறு நாட்டு வீரர்களும் பங்குபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் அங்கு நடக்கத் தொடங்கிவிட்டதால், இனிமேல் நிலைமை மாறும் என பாகிஸ்தான் கருதுகிறது.
அந்த தீவிரவாத தாக்குதலுக்கு முந்தைய நாள்தான் சமரவீரா இரட்டை சதம் அடித்திருந்தார். தொடையில் புல்லட் பாய்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் சமரவீராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக 12 இன்ச் வரை தொடையில் பாய்ந்த புல்லட் எந்த நரம்புகளையும் எலும்புகளையும் பாதிக்காமல் அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. பயங்கரமான அந்த சூழலிலிருந்து மீண்டு வந்து 30 டெஸ்ட்டுகளில் ஆடிவிட்டுதான் சமரவீரா ஓய்வு பெற்றார். அறுவை சிகிச்சை மூலம் அவர் தொடையிலிருந்து அகற்றப்பட்ட புல்லட்டை இன்னமும் சமரவீரா பத்திரமாக வைத்திருக்கிறார். அது தன்னுடைய ராசியான புல்லட்டாக பாதுகாக்கப்போவதாக கூறியிருக்கிறார்.
தாக்குதலின்போது குண்டுகளிலிருந்து வெடித்து சிதறிய சில சிறு துண்டுகள் லக்மலின் கால்களுக்குள் பாய்ந்துள்ளது. அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றினால் ஒரு வருட கரியர் பாதிக்கப்படும் என்பதால் அதை செய்யாமலே விட்டுவிட்டார். லக்மல் அதன்பிறகு கிரிக்கெட் ஆட வெளிநாடு போகும்போது ஒவ்வொரு முறை விமானநிலையத்தின் ஸ்கேனிங்கில் செல்லும்போதும் ‘பீப்’ சத்தம் கேட்குமாம். பதறிப்போய் சோதனை செய்ய வரும் அதிகாரிகளிடம் அவரின் ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்துக்காட்டிவிட்டு செல்வாராம்.
பரனவிதானா அப்போதுதான் கிரிக்கெட் உலகுக்கு அறிமுகமாகியிருந்தார். துப்பாக்கிச்சூட்டில் அவருக்கும் சில காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. ‘பல கனவுகளோடு இலங்கை கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஒரு இளம் வீரருக்கு இப்படி ஆகிவிட்டதே, அவர் மீண்டு வந்துவிட வேண்டும்’ என்று மொத்த அணியும் வேண்டிக்கொண்டது. பரனவிதானாவும் மீண்டு வந்து சில காலம் கிரிக்கெட் ஆடிவிட்டு சமீபத்தில்தான் ஓய்வு பெற்றிருக்கிறார்.
‘நாங்கள் ஒரு 3-4 நிமிடங்கள்தான் இப்படியொரு பயங்கரமான சூழலில் இருந்தோம். ஆனால், போர்ச்சூழலில் இருக்கும் வீரர்களும் மக்களும் ஒவ்வொரு நிமிடமும் இந்த பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். அதனால் நாங்கள் யார் மீதும் குறை கூற விரும்பவில்லை’ என சங்கக்கரா அந்த தீவிரவாத தாக்குதல் குறித்து கூறியிருப்பார். ஒட்டுமொத்த இலங்கை அணியுமே இப்படியான ஒரு பக்குவப்பட்ட மனநிலையோடு இந்த தாக்குதலை அனுகியதால்தான் இப்படியொரு கோர சம்பவத்துக்கு பிறகு அவர்களால் உடனடியாக மீண்டுவர முடிந்தது.
Leave a Reply