“Mohammed Siraj பெரிதும் மதிக்கும் ஒரே கிரிக்கெட்டர் விராட் கோலி. விராட்தான், சிராஜின் பலம். முந்தைய இரண்டு ஆண்டுகள் சிராஜ், ஆர்.சி.பி–யில் பெரிதாக பெர்ஃபார்ம் செய்யாதபோதும், விராட்தான் அவனுக்கு ஆதரவாக இருந்தார். விராட்டும், ஆர்.சி.பி நிர்வாகமும் அவன் மீது நம்பிக்கை வைத்து, அவனை அணியில் தக்கவைத்தனர். அவனை அப்படியே விட்டுவிடவில்லை. ‘லைன் அண்ட் லென்த்தில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்து’ என, சிராஜிடம் அடிக்கடி விராட் சொல்வார். சிராஜின் இந்த வெற்றியில் விராட்டுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.
தந்தையை இழந்தபிறகு, கடந்த இரண்டு மாதங்கள் எங்களுக்கு ரொம்பவே சோகமான காலம். எங்கள் தந்தை குடும்பத்தின் தூணாக இருந்தார். ஆனால், Mohammed Siraj அந்த வலியை மறைத்து, இந்தளவு சாதித்திருப்பதில் என் தாய்க்கு ரொம்பவே திருப்தி. தொடர்ந்து அவன் என் தாயுடன் பேசிக்கொண்டிருந்தான். அவனது பெர்ஃபார்மன்ஸ் இந்தளவு மேம்பட்டிருப்பதற்கு, என் தாய் கொடுத்த ஊக்கம்தான் காரணம்.

‘ஒருநாள் மற்றும் டி 20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் நல்ல பந்தைக் கூட பவுண்டரி அடித்துவிடுவார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் அப்படி அல்ல.’ – என்று என் தந்தை அடிக்கடி சொல்வார். அதனால், சிராஜ் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற வேண்டும் என்பதே அவர் விருப்பம். தந்தையின் ஆசைப்படி அவன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தளவு சாதித்திருப்பது பெருமையாக இருக்கிறது. அதைப் பார்க்க அவர் இல்லை என நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
Also Read: ‘சதம் அடிக்கலையே!’ – சுப்மன் கில் தந்தை ஆதங்கம்; டிபிகல் இந்திய தந்தை என கிண்டல்!
என் தந்தை சிராஜுக்கு எல்லாவிதங்களிலும் பக்கபலமாக இருந்தார். கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற அவன் ஆசைக்கு ஆதரவாக இருந்தார். எவ்வளவு நாள் விளையாட முடியும் என்று நினைக்கிறாயோ, அவ்வளவு நாள் விளையாடு என்றார். என் தந்தையின் தியாகத்துக்கும், கடின உழைப்புக்கும் பலன் கிடைத்து விட்டது.
கிரிக்கெட் மட்டுமே சிராஜின் விருப்பமாக இருந்தது. முக்கியமான தேர்வுகளைப் புறக்கணித்துவிட்டுகூட கிரிக்கெட் விளையாடப் போயிருக்கிறான். தேர்வு எப்படி எழுதினாய் என்று கேட்டால், நன்றாக எழுதிவிட்டதாகச் சொல்வான். ஆனால், ரிசல்ட் வரும்போது பார்த்தால், ஆப்சென்ட் என இருக்கும். ஆம், கிரிக்கெட் ஆடப் போய்விட்டேன் என பின்னர் ஒப்புக்கொள்வான்.
இந்த டெஸ்ட் தொடரில் அவன் உச்சம் தொடுவான் என தெரியும். நாங்கள் இந்த சாதனையை எதிர்பார்த்துதான் காத்திருந்தோம்” என்றார் முகமது சிராஜின் சகோதரர் முகமது இஸ்மாயில்.
Leave a Reply