விராட் கோலியின் சொந்த வாழ்வில் ஒரு முக்கியமான தருணம் அரங்கேறிக்கொண்டிருந்தபோது, இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. இந்த இரு தருணங்கள் குறித்தும் Virat Kohli-யிடம் கேட்டபோது அவர், “முதலில் இந்த இரண்டையும் ஒப்பிடவே கூடாது. தந்தையான தருணம் என் வாழ்வில் உன்னதமான தருணம்.” என்றவர், அணியினருடன் தனக்கு இருக்கும் பிணைப்பு குறித்து விரிவாகப் பேசினார்.
“இரண்டாவது விஷயம், அணியினருடன் உள்ள பிணைப்பு என்பது எந்த சூழலிலும் விட்டு விலகப் போவதில்லை. ஏனெனில், கடந்த ஆறு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டை உயர்த்த வேண்டும்; இந்திய கிரிக்கெட்டை உயர்த்த வேண்டும் என சொல்லி சொல்லி உத்வேகப்படுத்தப்பட்டிருக்கிறோம். இதற்காக ஒட்டுமொத்த அணியும் உழைப்பைக் கொட்டியிருக்கிறது. பலவிதங்களில் நீங்கள் அணியினருடன் கனெக்டாகி இருக்கிறீர்கள்”

“நான் எல்லா போட்டிகளையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின்போது, ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை நோக்கிச் சென்றது இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. அந்தப் போட்டியை நான் மருத்துவமனையில் இருந்தபோது மொபைல் போனில் பார்த்துக்கொண்டிருந்தேன். டாக்டர் வந்து எங்கள் இருவரையும் உள்ளே அழைக்கும்வரை மேட்ச் பார்த்தேன்.”
“முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்தபின், அணி மீண்டு வந்து இந்தத் தொடரை வென்றிருக்கிறது. அதற்காக நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன். அணியில் உள்ள ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர். இது இந்திய கிரிக்கெட்டில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும். நான் அதில் அங்கம் வகித்தேனா, இல்லையா என்பது விஷயமே இல்லை. இது ஒட்டுமொத்த அணி, நாடு பெருமைப்படும் விஷயம்.
Also Read: ‘இந்த பிட்ச் வேற மாதிரி’ – சஸ்பென்ஸ் வைக்கும் கியுரேட்டர்! INDvENG முதல் டெஸ்ட் பிரிவ்யூ
வெளியில் இருந்து பார்ப்பது போல, டிரெஸ்ஸிங் ரூம் இருக்காது. ரஹானே சொல்வதும் நான் சொல்வதும் வெறுமன எங்கள் கருத்து மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த அணியின் கருத்தும்தான். நாங்கள் எல்லோரும் வெற்றி எனும் ஒரே இலக்கை நோக்கி பயணிக்கிறோம். ரஹானே கேப்டன் என்ற முறையில் பொறுப்பெடுத்து, அணியை சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார். அவர் அணியை வழிநடத்திய விதம் அட்டகாசமாக இருந்தது. நாங்கள் இருவரும் களத்தில் பேட்டிங்கின்போது ஒருவருக்கொருவர் உதவிசெய்து, அனுபவித்து விளையாடியிருக்கிறோம். களத்தில் மட்டுமல்ல, எங்கள் இருவருக்கும் இடையே பரஸ்பரம் நல்ல புரிதல் உள்ளது” என்றார் Virat Kohli.
Leave a Reply