பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கெதிரான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் 5-2 என்ற கோல் கணக்கில் தோற்று வெளியேறியிருக்கிறது பார்சிலோனா. இதன்மூலம், கிறிஸ்டியானோ ரொனால்டோவைத் தொடர்ந்து இப்போது லயோனல் மெஸ்ஸியும் சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறார். இரு பெரும் ஜாம்பவான்களின் சாம்பியன்ஸ் லீக் பயணம் இதோடு முடிவுக்கு வருவதுபோல் தெரிகிறது.
பார்சிலோனா, பி.எஸ்.ஜி அணிகள் மொதிய ரவுண்ட் ஆஃப் 16 போட்டியின் இரண்டாவது லெக் ஆட்டம் இன்று அதிகாலை பார்சிலோனாவின் கேம்ப் நூ மைதானத்தில் நடந்தது. பாரிஸில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் 4-1 என தோற்றிருந்தது பார்சிலோனா. இளம் புயல் கிலியன் எம்பாப்பே ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார். இதனால் பார்சிலோனா அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் வரலாறை நினைத்து கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக்கொண்டிருந்தார்கள் பார்கா ரசிகர்கள்.
2017 – இதேபோல் பார்சிலோனா, பி.எஸ்.ஜி அணிகள் மோதிய சாம்பியன்ஸ் லீக் போட்டியின் முதல் சுற்றில் 4-0 என வென்றிருந்தது பி.எஸ்.ஜி. ஆனால், இரண்டாவது சுற்றில் அட்டகாச கம்பேக் கொடுத்த பார்சிலோனா 6-1 என்ற அடுத்து சுற்றுக்கு முன்னேறியது. அதேபோல் இம்முறையும் ஒரு அதிசயம் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மெஸ்ஸி அண்ட் கோ அப்படி எந்த அதிசயத்தையும் இன்று நிகழ்த்தவில்லை. 1-1 என ஆட்டம் டிரா ஆனதால், காலிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியிருக்கிறது பார்கா.

இருந்தாலும், கடந்த சில ஆண்டுகள் போல் இல்லாமல், இரண்டாவது சுற்றில் நன்றாக போராடி ஒரு சிறப்பான பெர்ஃபாமன்ஸைக் கொடுத்தது. ரோமா, லிவர்பூல், பேயர்ன் மூனிச் என கடந்த 3 ஆண்டுகளாக அடி வாங்கி அடி வாங்கி வெளியேறிக்கொண்டிருந்தது அந்த அணி. கொஞ்சம் பின்தங்கியிருந்தாலும் போராடுவதை நிறுத்திவிட்டு சோடை போய்விடுவார்கள். ஆனால், இம்முறை 90 நிமிடமும் வெற்றிக்காகப் போராடினார்கள்.
ஆரம்பத்திலிருந்தே கோல் போஸ்டைத் தொடர்ந்து முற்றுகையிட்டுக்கொண்டிருந்தது பார்சிலோனா. அடுத்தடுத்து அட்டாக்குகளைத் தொடுத்துக்கொண்டிருந்தனர் அவர்களின் அட்டாக்கர்கள். முதல் அரை மணி நேரத்துக்குள்ளாகவே 10 ஷாட்கள் அடித்திருந்தது அந்த அணி. ஆனால், பி.எஸ்.ஜி கோல்கீப்பர் கெய்லர் நவாஸ், தன் அட்டகாசமான செயல்பாட்டால் பார்சிலோனாவை கோலடிக்க விடாமல் பார்த்துக்கொண்டார்.
ஷாட்கள், பொசஷன் என்று முழுக்க முழுக்க பார்சிலோனாவே ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியில் முதல் கோல் அடித்தது என்னவோ பி.எஸ்.ஜி அணிதான். டிஃபன்ஸில் கவனம் செலுத்தி, கவுன்ட்டர் அட்டாக்கை நம்பி களமிறங்கிய அவர்களின் பிளானுக்கு 29-வது நிமிடம் நல்ல பலன் கிடைத்தது. மௌரா இகார்டியை, பார்சிலோனா டிஃபண்டர் லெங்லே பாக்சுக்குள் ஃபவுல் செய்ய அந்த அணிக்கு பெனால்டி கிடைத்தது. அதை எம்பாப்பே கோலாக்கினார். சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் பார்சிலோனாவுக்கு எதிராக ஒரே சீசனில் 4 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் எம்பாப்பே.
இதனால், குறைந்தபட்சம் 4 கோல்கள் அடித்தால்தான் கூடுதல் நேரத்துக்கே போட்டியைக் கொண்டுசெல்ல முடியும் என்ற நெருக்கடி ஏற்பட்டது. வழக்கமான பார்சிலோனா அணி இந்நேரம் துவண்டு போயிருக்கும். ஆனால், இம்முறை தொடர்ந்து போராடினார்கள். எம்பாப்பே வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறியதோடு யெல்லோ கார்டும் வாங்கியிருந்த மிங்கேசாவை 35-வது நிமிடத்திலேயே எடுத்துவிட்டு ஜூனியர் ஃபிர்போவை இறக்கினார் ரொனால்ட் கீமன். டி யாங் டிஃபன்ஸில் இணைய 3-4-3 ஃபார்மேஷனுக்கு மாறியது பார்சிலோனா.
37-வது நிமிடம் 30 யார்ட் தூரத்திலிருந்து ஒரு அட்டகாசமான கோல் அடித்தார் மெஸ்ஸி. அதுமட்டுமல்லாமல், அடுத்தடுத்து கோல் முயற்சிகள் செய்துகொண்டே இருந்தனர். விளைவாக 45-வது நிமிடம் அந்த அணிக்குப் பெனால்டி கிடைத்து. பாக்சுக்குள் குர்சாவா கிரீஸ்மேனை ஃபவுல் செய்ததன் விளைவாக பெனால்டி கிடைத்தது. ஆனால், மெஸ்ஸியின் இந்த முயற்சியையும் அட்டகாசமாக தடுத்தார் கெய்லர் நவாஸ். முதல் பாதியின் முடிவில் 1-1 என ஆட்டம் சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதி – கிட்டத்தட்ட முதல் பாதியின் அதே கதைதான். ஆனால், முதல் பாதியைப் போல் இரண்டாவது பாதியில் டார்கெட் நோக்கி பார்சிலோனாவால் ஷாட்கள் அடிக்க முடியவில்லை. முதல் பாதியில் இலக்கை நோக்கி 9 ஷாட்கள் அடித்தவர்கள், இரண்டாவது பாதியில் ஒன்றை மட்டுமே அப்படி அடித்தார்கள். கடைசி கட்டத்தில் பல மாற்றங்களை கீமன் செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆட்டம் 1-1 எனடிரா ஆக, 5-2 என தோல்வியடைந்தது பார்சிலோனா.
நேற்று போர்டோ அணியிடம் தோல்வியடைந்து யுவன்டஸ் வெளியேறியது. அதனால், கிறிஸ்டியானோ ரொனால்டோ சாம்பியன்ஸ் லீக் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டு வெளியேறினார். இப்போது மெஸ்ஸியும் வெளியேறிவிட்டார். இரண்டு பெரும் தலைகளும் அடுத்தடுத்து வெளியேறியதால், அவர்களின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கால்பந்து உலகம் கருதுகிறது.
Leave a Reply