இறுதி சுற்று படத்தில் மாதவன் சென்னைக்கு வந்ததும் ஒரு பாக்ஸிங் போட்டி நடக்குமே ஞாபகம் இருக்கிறதா! மதியின் அக்கா லக்ஸ், நன்றாக விளையாடியும் தோற்றதாக நடுவர்களால் அறிவிக்கப்படுவார். போட்டி முழுவதும் அவர்தான் எதிராளியை அடித்திருப்பார். ஆனால், முடிவு அவருக்கு எதிராக கொடுக்கப்படும். மாதவன்கூட அவரை திட்டிவிட்டுச் செல்வார். பார்ப்பதற்கு சினிமாத்தனம் நிறைந்த காட்சியாகத் தெரியலாம். லக்ஸ்தான் வென்றவர் என்று அப்பட்டமாகத் தெரியும்போது கூட முடிவை மாற்றுவார்களா என்று தோன்றலாம். ஆனால், உண்மையிலேயே இறுதிச் சுற்று சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும், அதுபோன்ற டொமஸ்டிக் போட்டியில் இல்லை. ஆசியன் கேம்ஸில். ஆம், ஆசியன் கேம்ஸில்.
2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் இன்சியானில் நடைபெற்றது. செப்டம்பர் 30, பெண்களுக்கான லைட்வெயிட் குத்துச்சண்டைப் போட்டியின் அரையிறுதி ஆட்டம். இந்தியாவின் சரிதா தேவி vs தென் கொரியாவின் ஜீனா பார்க்.

சரிதா தேவி – இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை. 2006-ல் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். 2014 காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். அதற்காக அர்ஜுனா விருது சில நாள்களிலேயே அவர் கைகளை அலங்கரித்தது. காமன்வெல்த் பதக்கம், அர்ஜுனா விருது என்று வெற்றி மழையில் நனைந்துவிட்டு கொரியா சென்றிருந்த சரிதாவுக்கு அன்று அதிர்ச்சிகள் காத்திருந்தன.
அந்த அரையிறுதி ஆட்டம்…
நான்கு சுற்றுகள் கொண்ட போட்டியின் முதல் சுற்றில் தோற்றுவிட்டார் சரிதா. ஆனால், இரண்டாவது சுற்றில் வீருகொண்டு எழுந்த சரிதா, பார்க்கை சரமாரியாகத் தாக்கினார். மூன்று நடுவர்களில் இருவர் அவருக்குச் சாதகமாக முடிவை வழங்கியிருந்தாலும், இன்னொரு நடுவர் பார்க்குக்கு சாதகமாக முடிவை வழங்கினார். அதுவே கேள்விக்குறியாக இருக்க, மூன்றாவது சுற்றில் இன்னும் பெரிய சர்ச்சை எழுந்தது.
அந்த சுற்றில் கிட்டத்தட்ட பார்க்கை நாக் அவுட் செய்துவிட்டார் சரிதா. அந்த அளவுக்கு உக்கிரமான ஆட்டம். ஆனால், கடைசியில் கொடுக்கப்பட்ட முடிவு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு நடுவர்கள் பார்க்குக்குச் சாதகமாக முடிவைக் கொடுத்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள். நான்காவது சுற்று சரிசமமாகச் சென்றிருந்தாலும் இம்முறையும் இரண்டு நடுவர்கள் உள்ளூர் வீராங்கனைக்கே சாதகமான முடிவை வழங்கினார்கள்.
போட்டி முடிந்ததும் சரிதாவுக்கு எதிராக முடிவு வர, அவரால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சொல்லப்போனால், யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விரக்தியின் உச்சத்தில் ரிங்கிலேயே நின்றிருந்தார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை தாங்க முடியாமல் நின்றிருந்தார். அவரும், அவருடைய பயிற்சியாளர்களும் நடுவரிகளிடம் முறையிட்டார்கள். முடிவு மாறவில்லை.

பதக்கம் கொடுக்கும் நிகழ்வு. அரையிறுதியில் தோற்றதால் சரிதாவுக்கு வெண்கலம்தான். அவரை வென்ற பார்க் இறுதிப் போட்டியில் தோற்றதால் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தன் பதக்கம் கொடுக்கப்பட்டதும், அதை ஏற்க மறுத்த சரிதா, பார்க்கின் கழுத்துக்கு அருகே வைத்துவிட்டு நகர்ந்துவிட்டார். பார்க் அதை அவருக்குக் கொடுக்க முயற்சி செய்தும் சரிதா வாங்கவில்லை.
சரிதா, கண்ணீர் சிந்திவிட்டு வெண்கலத்தை வாங்கியிருக்கலாம். ஆனால், அவர் நியாயத்துக்காகப் போராடவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். “எனக்கு வெண்கலம் மட்டும் கிடைத்திருக்கக்கூடாது. குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கமாவது கிடைத்திருக்கவேண்டும். அதனால்தான் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போதுதான் எனக்கு மன ஆறுதலாக இருக்கிறது. இல்லையெனில் இந்த விஷயம் நெடுங்காலம் என்னை வதைத்திருக்கும்” என்று கூறினார் சரிதா.
அதன் பிறகு முறையிடப்பட்டும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. மாறாக, அவரது நடவடிக்கைக்காக ஒரு ஆண்டு தடை செய்யப்பட்டார். இருந்தாலும், இந்நிகழ்வுக்குப் பிறகு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார் சரிதா.
இது சர்வதேச பாக்ஸிங்கில் அரங்கேறிய நிகழ்வு!
தன் நியாயத்துக்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருந்த சரிதாவுக்கு இன்று பிறந்தநாள்!
Leave a Reply